அய்யனாரப்பன் கோவில் திருவிழா
எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் அய்யனாரப்பன் கோவில் திருவிழா நடந்தது.
எடப்பாடி:-
எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோவில் உள்ளது இக்கோவிலில் பச்சை போடும் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் மேளதாளம் முழங்க அய்யனாரப்பன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் அய்யனாரப்பன் சன்னதியில் நிறைவடைந்தது. அங்கு பக்தர்கள் அய்யனாரப்பனுக்கு கொண்டு வந்திருந்த பச்சரிசி மாவு, பழம், தேங்காய் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பூரணி, பொற்பலை சமேத அய்யனாரப்பன் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வீரகாரன், புடவைக்காரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாடுகளை பூசாரி சே.மணி நடத்தினார். இந்த விழாவில் வன்னியர் குல சத்திரிய சமுதாய மக்கள், மாமன், மைத்துனர்கள், பிறந்த வீட்டு பெண்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் போது, வைகாசி மாதம் தெவம் நடத்துவது குறித்து கோவில் நிர்வாகிகள் ஆலோசித்தனர்.