ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் 170 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி. போராட்டம்
தொழிலாளர் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். மூடப்பட்டு உள்ள என்.டி.சி. மில்களை உடனடியாக திறக்க வேண்டும். 240 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி அந்த சங்க மாநில செயலாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் சி.தங்கவேல் ஆகியோர் தலைமையில் கோரிக்கை தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியபடி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் திரண்டனர்.
170 பேர் கைது
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேரையும் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது குறித்து மாநில செயலாளர் எம்.ஆறுமுகம் கூறும்போது, என்.டி.சி. மில்களை இயக்குவது தொடர்பாக மத்திய அரசு இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை பற்றி கவலைப் படாமல் இருப்பதால் மத்திய அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
கோவை மாவட் டத்தில் கோவை, சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய பகுதிகளில் நடந்த போராட்டத்தில் மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.