23 வாகனங்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்-ரூ.2¼ லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே 23 வாகனங்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுமார் ரூ.2¼ லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-12-03 18:45 GMT

புத்தக கண்காட்சி

சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்து வரும் புத்தக கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இந்த கண்காட்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.

இதையொட்டி இன்று வரை புதிய பஸ்நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள், இதர வாகனங்கள் ஏர்ஹாரன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி யாராவது ஏர்ஹாரன் பயன்படுத்தினால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஏர்ஹாரன் பறிமுதல்

இதனிடையே, சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராஜராஜன், கல்யாண்குமார் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சேலம் புதிய பஸ்நிலையத்தில் நேற்று திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடையை மீறி 23 வாகனங்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை வாகனங்களில் இருந்து அகற்றி பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த 23 வாகனங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்