ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2022-10-12 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கல்யாண விழா

ஆத்தூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு சிறப்பு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டகப்படிதாரர்கள் மாநில தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன், ஆத்தூர் ராமலிங்க பிள்ளை, நெல்லை கற்பக விநாயகம் மற்றும் திருச்செந்தூர் கோவில் முன்னாள் அறங்காவலர் அண்ணாமலை சுப்பிரமணியம், புதுகிராமம் ராஜா ராம், சுப்பிரமணியம் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தவசுக்கு புறப்பாடு

பின்னர் மாலையில் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தவசுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், மாலையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சாந்தி தேவி, தக்கார் தமிழ்செல்வி மற்றும் ஆலய பணியாளர்கள், கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்