பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சாமி சிலை-செப்பு நாணயங்கள் பறிமுதல்
நன்னிலத்தில், வீட்டில் பதுக்கி வைத்து இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சாமி சிலை மற்றும் செப்பு நாணயங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக தந்தை-மகனை கைது செய்தனர்.
நன்னிலம்:
நன்னிலத்தில், வீட்டில் பதுக்கி வைத்து இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சாமி சிலை மற்றும் செப்பு நாணயங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக தந்தை-மகனை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடைத்தெருவில் வசித்து வருபவர் கண்ணன்(வயது 53). இவருடைய மகன் சூரிய பிரகாஷ்(23). இவர்கள் தங்களதுவீட்டில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் வீட்டில் பழங்கால ஐம்பொன் சாமி சிலை மற்றும் செப்பு நாணயங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஐம்பொன் சாமி சிலை-செப்பு நாணயங்கள் மீட்பு
அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் நன்னிலத்துக்கு வந்து கண்ணன் வீட்டில் சோதனை ெசய்தனர்.
இந்த சோதனையில் கண்ணன் வீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரை அடி உயர ஐம்பொன்னால் ஆன தன்வந்திரி சிலையும், ஒரு அடி உயர வெண்கலத்தால் ஆன ராக்காயி அம்மன் சிலையும், இரண்டு செப்பு நாணயங்கள், அரை கிலோ எடை கொண்ட காலச்சக்கரம் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சாமி சிலைகள், செப்பு நாணயங்கள், காலச்சக்கரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தந்தை-மகன் கைது
பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள், செப்பு நாணயங்கள், காலச்சக்கரம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கண்ணன் மற்றும் அவரது மகன் சூரிய பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் அந்த சாமி சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்றும், இந்த சிலைகள் அங்கு எப்படி வந்தது? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.