எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் மரணம்
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மதுரையை சேர்ந்தவர் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் (வயது 77). இவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி நெறிமுறைக்குழு தலைவர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தலைவராக இருந்து வந்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில், நாகராஜன் வெங்கட்ராமன், மனைவி மோகனராணி, மகள் கிருத்திகா, மருமகனும், தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பேரன் டாக்டர் அரவிந்த் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் வசித்து வந்தார்.
மாரடைப்பு
கால்வீக்கம் காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் கூட, காணொலி காட்சி மூலமாக மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தி, கருத்துகளை பகிர்ந்து வந்தார்.
சிகிச்சையின்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய உயிர் பிரிந்தது.
இறுதிச்சடங்கு
அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று நடந்தது. நாகராஜன் வெங்கட்ராமன் சிதைக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தீ மூட்டினார்.
நாகராஜன் வெங்கட்ராமன் மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியின் நெறிமுறைக்குழு தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன், மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தலைவராக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், மருத்துவ துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்தும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.