சாத்தான்குளம் வழக்கில் எய்ம்ஸ் டாக்டர் பரபரப்பு சாட்சியம்- ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்தது எப்படி? என விளக்கம்
சாத்தான்குளம் வழக்கில் எய்ம்ஸ் டாக்டர் மதுரை கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்தது எப்படி? என விளக்கம் அளித்தார்.
சாத்தான்குளம் வழக்கில் எய்ம்ஸ் டாக்டர் மதுரை கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்தது எப்படி? என விளக்கம் அளித்தார்.
இரட்டைக்கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள்.
இதில் படுகாயம் அடைந்த அவர்களை, கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., இரட்டைக்கொலை வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
எய்ம்ஸ் டாக்டர் ஆஜர்
இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி, சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த வழக்கானது பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து, அதுசம்பந்தமாக அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த்குமார், நீதிபதி முன்பு நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் கைதான 2 பேர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தொடர்ச்சியாக தாக்கினர்
எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த்குமார் அளித்த சாட்சியம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில் அவர்கள் இருவரையும் போலீசார் லத்தி, உருளை போன்றவற்றால் தாக்கினர். மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இதனால் உடல் உறுப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக செயல் இழந்துதான் அடுத்தடுத்து தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர் என கூறியிருந்தனர்.
அந்த அறிக்கையை எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவைச்சேர்ந்த நாங்கள் ஆய்வு செய்தோம். பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின்பு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். ஜெயராஜூம், பென்னிக்சும் இறந்ததற்கு காரணம், போலீசாரின் தொடர் தாக்குதல்கள்தான். இவ்வாறு டாக்டர் அரவிந்த்குமார் சாட்சியம் அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.