அதிமுக கடிதத்தை வாங்க மறுத்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தினார் சத்யபிரதா சாகு

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அதிமுக வாங்க மறுத்த தகவலை தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரியப்படுத்தினார்.

Update: 2023-01-03 06:30 GMT

சென்னை,

மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு, இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஒருவர் தங்கள் தொகுதிகளை சாராமல் எங்கு இருந்தாலும் வாக்களிக்கும் வகையில், 'ஆர்.வி.எம்.' என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுதொடர்பாக வருகிற 16-ந்தேதியன்று ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்குமாறு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் வருகிற 16-ந்தேதியன்று அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு தேசிய, மாநில கட்சிகளுக்கு, சத்யபிரத சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.

அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்படாததால் அதனை, வாங்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதால், தேர்தல் ஆணையத்துக்கே அந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அ.தி.மு.க.வுக்கு மாநில தேர்தல் ஆணையம் நேற்று மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தது. இந்தக் கடிதத்தை பெற அதிமுக மறுத்துவிட்டது. இந்த நிலையில் அதிமுக கடிதத்தை பெற மறுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரியப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்