நாளை நடக்க உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு: வைத்திலிங்கம் தகவல்

நாளை நடக்க உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்து உள்ளதாக வைத்திலிங்கம் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-22 09:38 GMT

சென்னை

அ.தி.மு.க. பொதுக்குழு 23-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக கூறிவருகிறார்கள். அதேவேளை சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது. பொதுக்குழுவை புறக்கணிக்க முடிவு இதனால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த சூழலில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது . 12ல் இருந்துநேற்று 9 ஆக குரைந்தது. இன்று 7 ஆக குரைந்து உள்ளது.அ.தி.மு.கவில் நிர்வாகரீதியான 75 மாவட்டங்களில் பெரும்பான்மை, அதாவது 68 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர். 2 நாட்களில் பன்னீர் செல்வத்திடம் இருந்த 5 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியுள்ளனர்.

பன்னீர் செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தேனி சையதுகான், வேளச்சேரி அசோக், குமரி அசோகன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், தஞ்சை சுப்ரமணி மட்டுமே ஆதரவாக உள்ளனர்.இதுதவிர, மொத்தம் உள்ள 2,500 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,300-க்கும் மேற்பட்டோர் எடப்பாடிக்கு ஆதரவாக, பொதுக்குழுவை குறிப்பிட்ட தேதியில் நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.

தற்போது வேளச்சேரி மாவட்ட செயலாளர் அசோக் இன்று எடப்பாடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதுபோல் முன்னாள் மாநிலங்கலவை எம்.பி. மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதேபோல் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்தநிலையில் கடைசி அஸ்திரமாக நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

நாளை நடக்க உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என்பது குறித்து மாலை அறிவிக்க உள்ளார். அ.தி.மு..க பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து இன்று மாலை அறிவிக்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். இந்த நிலையில் நாளை நடக்க உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வதுடன் ஆலோசனை நடத்திய பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இந்த தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்