சசிகலா ஆதரவாளர்கள் நட்ட கொடியை அ.தி.மு.க.வினர் பிடுங்கியதால் பரபரப்பு

திண்டிவனத்தில் சசிகலா ஆதரவாளர்கள் நட்ட கொடியை அ.தி.மு.க.வினர் பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-04 17:39 GMT

திண்டிவனம்:

திண்டிவனத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்கிறார். இதற்காக திருமண மண்டபம் மற்றும் சாலையோரத்தில் சசிகலா ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியை நட்டனர். இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம்-சென்னை புறவழிச்சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது சசிகலா ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக்கூடாது என்று கோஷமிட்டனர். இது பற்றி அறிந்ததும் சசிகலா ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு எற்பட்டது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே அங்கு வந்த திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனன் கூறுகையில், திண்டிவனத்தில் சசிகலாவை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட அ.தி.மு.க. கொடியை அகற்றிவிடுவதாக போலீசார் உறுதி அளித்து இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.வினர் அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

ஆனால் அ.தி.மு.க.வினர் கலைந்து செல்லாமல் அங்கு நடப்பட்டு இருந்த அ.தி.மு.க. கொடியை பிடுங்கினர். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. ஆனந்தன் தலைமையில் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொடியை பிடுங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சசிகலா ஆதரவாளர்களையும், அ.தி.மு.க.வினரையும் கலைந்துபோக செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்