அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்: ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே வலிமை பெற முடியும் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேச்சு

ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே வலிமை பெற முடியும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேசினாா்.

Update: 2022-06-18 17:02 GMT


மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பத்தில் கங்கைகொண்டான் பேரூர் மற்றும் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கங்கைகொண்டான் பேரூர் செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கட்சியில் ஒவ்வொரு தொண்டனும், இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். எனவே நமக்கு ஒற்றை தலைமை வேண்டும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையவேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போன்று ஒற்றை தலைமையுடன் வழி நடத்திட வேண்டும். அதற்கு நமது எடப்பாடி பழனிச்சாமியே சரியானவராக இருக்கும். ஆகையால் நாம் ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே வலிமை பெற முடியும். தி.மு.க.வை எதிர்ப்பதற்கு இன்று தமிழகத்தில் இருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம், கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரகுராமன், தகவல் தொழில் நுட்பம் கடலூர் மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் பாரதி உள்பட கட்சி நிர்வாகிகள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்