அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் கட்சியின் சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை என்று சசிகலா தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
சென்னை,
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது எனஅறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இன்றோடு சேர்த்து மொத்தம் 3 நாட்கள் இந்த வழக்கில் வாதம் நடைபெற்றது. சசிகலா, ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், பொதுக்குழு விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவே சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கில் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.