அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி; ஓபிஎஸ்-க்கு சாதகமான 2 பாய்ண்ட்கள்...! தீர்ப்பின் முழு விவரம்
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது.
அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
* எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால், தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது.
* பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதித்தால் வழி நடத்த தலைவர் இல்லாமல் கட்சி பாதிக்கப்படும்.
* தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடைவிதித்தால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
* தீர்மானங்களுக்கு தடைவிதித்தால் ஒருங்கிணைப்பாளர்கள் தான் மீண்டும் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும்.
* ஒருங்கிணைபாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் கட்சி செய்ல்பாடுகள் முடங்கும்.
* ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானம் பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும்.
* ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் நீக்கப்பட்டவிவகாரத்தில் 7 நாட்களுக்கு முன் நோட்டீஸ் தரவேண்டும் என்ற விதி மீறப்பட்டு உள்ளது.
*ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களும் செல்லுபடியாகக்கூடியவையே.
* பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்காலபொதுச்செயலாளரை நியமித்த தீர்மானங்களும் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.