அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி பழனிசாமி தரப்பு பரபரப்பு வாதம்
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், "ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், இந்த வழக்கில் இடைக்கால தடை கேட்கும் மனுவை விசாரிக்காமல், நேரடியாக மேல்முறையீட்டு பிரதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளை இறுதி விசாரணைக்காக இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தில், "தனி நீதிபதி ஜெயசந்திரன், ஒ.பன்னீர்செல்வம் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். 1.5 கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல. கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோர எந்த புள்ளி விவரங்களும் இல்லை. ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.
அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனிநீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு. 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் எங்கள் தரப்புக்கு ஆஅதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர். பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும்
உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஒ.பன்னீர்செல்வம் மறுத்ததால் சின்னம் கிடைக்காமல் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். தனி நீதிபதி உத்தரவால் பிரதன எதிர்கட்சியாக அதிமுக செயல்பட முடியாதநிலை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.