வேளாண்மை சிறப்பு முகாம்

ஊத்துமலையில் வேளாண்மை சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-01-19 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் ஊத்துமலையில் நடந்தது. தென்காசி வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமை தாங்கி, உழவன் செயலி மூலம் அனைத்து மானிய திட்டங்களுக்கு பதிவு செய்வது குறித்தும், இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் வரவேற்று பேசினார். ஊத்துமலை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சம்மாள் முத்தரசு முன்னிைல வகித்தார். ஊத்துமலை துணை வேளாண்மை அலுவலர் முருகன், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண்மை துறை மூலம் மானியத்தில் வழங்கப்படும் தென்னங்கன்றுகள், மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான், தார்பாலின், பண்ணை கருவிகள் குறித்து பேசினார்.

கால்நடை உதவி மருத்துவர் ரமேஷ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை மற்றும் குளிர் காலங்களில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜன் தோட்டக்கலை துறை மூலம் மானியத்தில் வழங்கப்படும் பழமரக்கன்றுகள், காய்கறிகள் தொகுப்பு குறித்து பேசினார். முகாமில் ஒன்றிய கவுன்சிலர் மலர்கொடி கோட்டைச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சின்ராசு, உதவி விதை அலுவலர் மாரியப்பன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சங்கரநமசு, கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரவி, கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகள் பேபிஷாலினி, ஹேனாகுமாரி மற்றும் ஊத்துமலை பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் சுமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்