நொய்யல் ஆற்றில் மழைநீருடன் திறந்து விடப்படும் சாயக்கிழிவு நீரால் விவசாயம் பாதிப்பு
நொய்யல் ஆற்றில் மழைநீருடன் திறந்து விடப்படும் சாயக்கிழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு
நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தொடங்கி திருப்பூர் மாவட்டம் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுநீரை ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழை நீர் வரும்பொழுது மழைநீருடன் கலந்து விடுவது வழக்கம். அதேபோல் சில சமயங்களில் இரவு நேரங்களில் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விடுவார்கள். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது அதே போல் கோவை மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது.
கரும் பச்சை நிறத்தில்...
பெய்த மழையால் நொய்யல் ஆற்றில்அதிக அளவு மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். நொய்யல் ஆற்றில் வரும் மழை நீர் சாயக் கழிவுநீருடன் சேர்ந்து கரும் பச்சை நிறத்தில் வருகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து காவேரி ஆற்றில் கலக்கும்போது நொய்யல்ஆற்று வெள்ள நீர் பச்சை பசேர் என்று கலக்கிறது.தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு காவிரியில் சென்று கொண்டிருக்கிறது.
உடலில் அரிப்பு
நொய்யல் ஆற்றில் வரும் சாயக்கழிவு நீர் காவிரியில் கலந்து செல்கிறது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் வருவதால் நொய்யல் ஆற்றில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் குளித்து செல்லும்போது உடலில் ஒரு விதமான அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் தண்ணீரில் தொடர்ந்து குளித்து வந்தாலும், இத்தண்ணீரை அருந்துவதாலும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் பலரிடம் கேட்டபோது:- தற்போது நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை பரிசோதனை செய்ததில் இதின் உப்புத் தன்மை 2100 டி.டி.எஸ். என உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டுகளில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்புத்தன்மை 68 டி.டி.எஸ். என இருந்தது.
வாடிக்கையாக உள்ளது
ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஒவ்வொரு முறையும் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் பணப்பயிர்கள் காய்ந்து வருகின்றன. நொய்யல் ஆற்றில் வரும் மழைநீருடன் கலந்து வரும் சாயக்கழிவு நீர் விவசாயம் செய்ய உயர்ந்த தண்ணீரல்ல. எனவே மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் மாசுகட்டுக்பட்டு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆறு மற்றும் காவிரி ஆற்று பாசன விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
நிரந்தர தீர்வு வேண்டும்
நொய்யல் ஆற்று பாசன விவசாயி வளையாபாளையத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் கூறியதாவது:-கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு எங்களது பெற்றோர்கள் பல்வேறு பண பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். விவசாயம் நல்ல செழிப்பாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தபோது நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளின் சாயக் கழிவு நீர் திறந்து விடப்படுவதால் எந்த விவசாயம் பயிரும் முளைக்க வில்லை. கருகி விடுகிறது. இதனால் நாங்கள் தென்னை பயிரிட்டோம். ஆனால் தென்னை மரம் வளர்ந்தும் காய்கள் பிடிக்கவில்லை. குறைவாக உள்ளது.
மேலும் நிலத்தின் தரம் குறைந்து வருகிறது. திருப்பூர் பகுதியில் சாயப்பட்டறையிலிருந்து திறந்து விடப்படும் சாயக்கழிவு நீரை நிறுத்தினால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும். இந்த தண்ணீரை நாங்கள் குடிப்பதில்லை. காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு இங்கு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் சாயக்கழிவு நீர் வருவதை தடுக்கவில்லை. எனவே தற்பொழுது வந்துள்ள அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
வாழ்வாதாரம் வேண்டும்
நொய்யல் ஆற்று பாசன விவசாயி ரங்கசாமி கூறியதாவது:-எங்கள் பகுதியில் தென்னை மரத்தை தவிர வேறு எந்த விவசாயமும் செய்யப்படுவதில்லை. சாயக்கழிவு நீர் உப்பு நீராக இருப்பதால் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. தென்னை பயிரிட்டு நாங்கள் சாவடியில் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலம் சுத்தமாக நாசமாகிவிட்டது. பலமுறை அரசாங்கத்திடம் கூறியும் நடவடிக்கை இல்லை.இது குறித்து நஷ்ட ஈடு வழக்கு போட்டும் எங்களுக்கு பணம் வரவில்லை.எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் வருவதை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பொருள் தயாரிக்க முடியவில்லை
மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளி ராமசாமி:- எங்கள் தாத்தா அப்பா காலத்தில் இருந்து நாங்கள் மண்பாண்டம் தொழில் செய்து வருகிறோம் இன்னலில் நீரோட்டில் வரும் சாயக்கழிவு நீர் மூலம் மண்பாண்டம் தயாரிக்கும் போது பானைகள் உடைந்து விடுகிறது இதனால் மண் பானைகள் மற்றும் மண்ணால் தயாரிக்கப்படும் எந்த ஒரு பொருளும் தயாரிக்க முடியவில்லை. இதனால் இந்த தொழிலையே நான் விட்டு விட்டேன். எனவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலக்காமல் நல்ல தண்ணீர் வர உறுதி அளிக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரின் மூலம்பாசன விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும், எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும்.
உப்புத்தன்மை உள்ளது
அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்:-நொய்யல் ஆற்று சாயக்கழிவு நீரால் கோவை முதல் நொய்யல் வரை உள்ள பாசன விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இந்த சாயக்கழிவு நீரால் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். நொய்யல் ஆற்றில் மழைநீருடன் வரும் சாயக்கழிவு நீர் அதிக அளவு உப்பு தன்மை உள்ளது. இதை விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாது. நொய்யல் ஆற்றின் அருகே ஊற்றுத் தண்ணீர் எடுத்து குடித்தாலும், ஆழ்துளை கிணற்றில் உள்ள தண்ணீரை குடித்தாலும், அந்த தண்ணீரில் குளித்தாலும் பல்வேறு வியாதிகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூரில் சாயப்பட்டறைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ள சாயக்கழிவு நீரை கலப்பதை தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.