வேளாண்மை மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கலவரம் நடந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் வேளாண்மை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து சேத விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்

Update: 2022-07-26 17:06 GMT

சின்னசேலம்

தனியார் பள்ளியில் வன்முறை

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மர்ம சாவு, வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 307 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் கடிதம்

இந்த நிலையில் பள்ளியில் வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்பந்தமான மரங்கள், செடிகள், பயிர்கள், ஆகியவற்றை கணக்கெடுத்து மதிப்பீடு செய்து தரும்படி கேட்டு கள்ளக்குறிச்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடமும், மின்சாதன பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் சேதம் குறித்து கணக்கெடுத்து தரும்படி கேட்டு மின்சாரத்துறை அதிகாரிகளிடமும் போலீசார் கடிதம் கொடுத்தனர்.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்

இதையடுத்து வேளாண்மை துறை இணை இயக்குனர் வேல்விழி தலைமையில், துணை இயக்குனர் சுந்தரம், வேளாண்மை அலுவலர் அனுராதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் முருகன், முரளி உள்பட 10 பேரை கொண்ட குழுவினர் நேற்று காலை பள்ளி வளாகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தனித்தனி குழுவாக சென்று சேதப்படுத்தப்பட்ட வாழை, தென்னை மரங்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளும், பூச்செடிகள், புல்வெளிகள், அலங்கார செடிகள் உள்ளிட்ட செடி வகைகள் மற்றும் கொய்யா, சப்போட்டா போன்ற தோட்டப்பயிர்களை தோட்டக் கலைத்துறை அதிகாரிகளும் கணக்கெடுத்து வருகின்றனர். இவர்கள் சேதப்படுத்தப்பட்ட மரங்கள், செடிகள் மற்றும் தோட்டப்பயிர் ஆகியற்றின் எண்ணிக்கை விவரம் மற்றும் சேத மதிப்பு ஆகியவற்றை போலீசாரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.

மின்சாரத்துறை அதிகாரிகள்

அதேபோல் வன்முறையாளர்களால் சேதப்படு்த்தப்பட்ட மின்சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்கள் குறித்து கணக்கெடுப்பதற்காக உதவி செயற்பொறியாளர் ரங்கசாமி, உதவி பொறியாளர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் 7 பேரை கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை, அலுவலகம், விடுதி, சமையலறை உள்ளிட்ட பகுதிகளில் சேதப்படுத்தப்பட்ட மின்சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்து வருகிறார்கள். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் சேதப்படுத்தப்பட்ட வேம்பு உள்ளிட்ட சிலவகை மரங்களை வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்