டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் விரைவில் அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

Update: 2023-05-15 20:06 GMT

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் விரைவில் அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

பேட்டி

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை உருவாக்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் ஆழ்ந்து சிந்தித்து வருகிறார். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன. சிறப்பான திட்டங்கள் வெகுவிரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு கிடைக்கும்.

அறுவடைக்கு பிறகான விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா பகுதியில் நிலம் கிடைப்பது மிகவும் கடினம். என்றாலும், அதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நிலம் கொடுக்க நில உரிமையாளர்கள் முன் வந்தால் மிகவும் மகிழ்ச்சி.

நல்ல செய்தி

டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் வர வேண்டும் என முதல் முதலில் தி.மு.க. தான் சட்டப்பேரவையில் வலியுறுத்தியது. எனவே டெல்டா பகுதிக்கு நிச்சயமாக மிக சிறப்பான திட்டங்கள் விரைவில் வரும். விவசாயிகளிடம் கலந்து பேசி விவசாயம் சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில்கள் என்னென்ன கொண்டு வரலாம் என முடிவு செய்யப்படும்.

நிச்சயமாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த அமைச்சர் பதவி என்பது எனக்கானது மட்டுமல்ல, அனைவருக்குமான பதவி. முதல்-அமைச்சர் எப்போது டெல்டாக்காரன் என சொன்னாரோ அப்போதே நாங்கள் அனைவரும் அமைச்சராகி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்