சோளப்பயிரில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம்

சோளப்பயிர் சாகுபடியில் சில தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலமாக அதிக மகசூல் பெறலாம்.

Update: 2022-07-09 21:20 GMT

ஈரோடு

சோளப்பயிர் சாகுபடியில் சில தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலமாக அதிக மகசூல் பெறலாம்.

விதை நேர்த்தி

சிறு மற்றும் குறு தானிய பயிர்களில் சோளப்பயிர் தமிழகத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உணவு தானியமாகவும், கால்நடை தீவனத்துக்கும் பயன்படுவதால் உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகும். இவை இறவை மற்றும் மானாவாரி பயிராகும். வறட்சியை தாங்கி வளரும். 90 முதல் 95 நாட்களில் இந்த பயிர் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த பயிர் உற்பத்தியை அதிகரிக்க தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் தாக்காத தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். இறவை நேரடி விதைப்பாக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதையும், நடவு பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 7½ கிலோ விதையும், மானாவாரி பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படும். விதையுடன் 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போபாக்டீரியா கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மண் பரிசோதனை

நடவு பயிராக இருந்தால் நாற்றங்காலில் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்ய வேண்டும். நிலத்தை உழுது, கட்டிகளை உடைத்து தயார் செய்ய வேண்டும். ஒரு சென்ட் நிலத்துக்கு 100 கிலோ வீதம் மக்கிய தொழு உரம் இட வேண்டும். விதை விதைத்த உடனும், 3, 7, 12, 17-ம் நாட்களில் நீர் பாய்ச்சினால் நாற்றுகள் நன்கு வளரும். நடவு வயலில் நிலத்தை இரும்பு கலப்பை கொண்டு நன்கு உழுது, கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 12½ டன் தொழு உரம் இட்டு உழ வேண்டும். உயிர் உரங்களான 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை கடைசி உழவின்போது இட வேண்டும். பிறகு 45 சென்டி மீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து நட வேண்டும்.

மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிட்டால் சிறந்த மகசூல் பெறலாம். நடவு பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 45 கிலோ சாம்பல் சத்தை வழங்கும் உரங்களை இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மணி மற்றும் சாம்பல் சத்தை அடி உரமாக இட வேண்டும். தழைச்சத்தை பொறுத்தவரை 50 சதவீதம் அடி உரமாகவும், நடவு செய்த 15-வது நாள் 25 சதவீதமும், 30-வது நாளில் 25 சதவீதமும் இடலாம்.

மகசூல்

சோளப்பயிர் தானியத்துக்காக விதைக்கப்பட்டால் நடவு செய்த 15-வது நாள் ஒரு முறையும், 30 முதல் 35-வது நாள் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். தீவன பயிராக இருந்தால் 30-வது நாள் ஒரு முறை களை எடுக்க வேண்டும். மேலும், மண்ணின் தன்மையை பொறுத்து 7 முதல் 12 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.

தானியம் கடினமாக மாறும் தருணத்தில் கதிர்களை மட்டும் அறுவடை செய்து காய வைக்க வேண்டும். பின்னர் கதிர்களில் இருந்து தானியங்களை பிரித்து எடுக்கலாம். இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹெக்டேருக்கு 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் கிலோ தானியமும், 10 டன் முதல் 12 டன் தட்டையும் மகசூல் பெறலாம்.

இந்த தகவலை ஈரோடு வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் விஞ்ஞானி சரவணகுமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்