விதிகளை மீறி குளத்துக்கு அருகில் மண் எடுக்கப்படுவதால் விவசாயிகள் பாதிப்பு

மடத்துக்குளம் பகுதியில் தொடர்ந்து விதிகளை மீறி குளத்துக்கு அருகில் மண் எடுக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-05 18:33 GMT

மடத்துக்குளம் பகுதியில் தொடர்ந்து விதிகளை மீறி குளத்துக்கு அருகில் மண் எடுக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கனிம வளங்கள்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல வகைகளில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். செங்கல் சூளைகளுக்கு விதிகளை மீறி மண் எடுப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பல தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பாசன குளத்துக்கு அருகில் உள்ள தனியார் நிலத்தில் விதிகளை மீறி அதிக அளவில் மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குதிரையாறு அணை, முத்துக்குளம், ஒட்டுக்குளம், குயவன் குட்டை, சங்கராமநல்லூர் (தெற்கு) கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் உடுமலை ஆர்.டி.ஓ. மற்றும் மடத்துக்குளம் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.

விதிமீறல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது':-

மடத்துக்குளத்தையடுத்த சங்கராமநல்லூர் பேரூராட்சி பகுதியில் முத்துக்குளம், ஒட்டுக்குளம், குயவன் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன. இவற்றுக்கு குதிரையாறு அணை மூலம் தண்ணீர் பெறப்பட்டு சுமார் 350 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நிலத்தடி நீராதாரம் மூலம் மறைமுகமாக பயன்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் முத்துக்குளத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் தரிசு நிலத்தில் கடந்த சில வாரங்களாக கனரக வாகனங்கள் மூலம் தொடர்ச்சியாக மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விதிகளை மீறி 25 அடி ஆழத்துக்கும் அதிகமாக தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிலத்தில் வெடி வைத்து கிரானைட் எடுக்கும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க விவசாயிகள் பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை.

நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்

இவ்வாறு தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் மண் எடுப்பதால் குளத்து நீர் தனியார் பூமிக்குள் சென்று குளம் வறண்டு போகும் நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு இந்த பகுதி முழுவதும் பாலைவனம் போல மாறிவிடும் அபாயம் உள்ளது.இதனால் இந்த பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எனவே அந்த இடத்தில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.

மடத்துக்குளம் பகுதியில் கிராவல் மண், செம்மண் என முறைகேடாக எடுப்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், கனிம வளத்திருட்டால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்