தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவு
தமிழகத்தில் அனலை கக்கிய அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
சென்னை,
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதற்கிடையே அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் காலம் கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கியது. தொடக்கம் முதலே பட்டைய கிளப்பிய கத்தரி வெயில் படிப்படியாக கோர தாண்டவமே ஆடியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயில் உக்கிரமாக தலைவிரித்து ஆடியது என்றே சொல்லலாம்.
இதனால் மக்கள் நிம்மதி இழந்து தவித்தனர். வெயிலுக்கு பயந்து வீடுகளிலேயே முடங்கினர். புழுக்கத்தாலும், உஷ்ணத்தாலும் இரவு நேரத்தை மிகவும் தவிப்புடன் மக்கள் கடத்தினர். அந்த வகையில் மக்களின் நித்திரையை தொலைத்த கத்தரி வெயில் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
வெப்பநிலை உயர வாய்ப்பு
கத்தரி வெயில் நிறைவு நாளான நேற்று வெயிலின் தாக்கம் மிகுதியாகவே இருந்தது. நிறைவு காலத்தில் ஏதாவது மனம் மாறி கொஞ்சம் ஆறுதல் தரலாம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். அந்தளவு வெயில் நேற்று வறுத்தெடுத்தது. இதனால் கத்தரி வெயில் காலம் ஓய்ந்தது என்ற மகிழ்ச்சி மக்கள் மனதில் தெரியவில்லை.
நடக்கும் காலசூழலை பார்க்கும்போது, கத்தரி வெயில் ஓய்ந்தாலும் கோடை வெயில் ஒருவழி பண்ணாமல் விடாது போல இருக்கிறது. அந்தளவு வெயிலின் தாக்கம் வெகுவாகவே இருக்கிறது. இதற்கிடையில் வெப்ப அழுத்தம் காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை உயரலாம் என்பதை தனக்கே உரிய பாணியில் 'அசவுகரியம்' ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மனநிலை இன்னும் தவிப்பை உணர்ந்து வருகிறது.
மிதமான மழை
அதேவேளை 30-ந் தேதி (இன்று) முதல் 2-ந் தேதி வரையிலான 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஆறுதல் தகவலை தந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு 2-ந் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.