கல்குவாரிக்கு எதிராக போராட்டம் தீவிரம்

கப்பியறை பேரூராட்சியில் கல்குவாரிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கவுன்சிலர்களை சந்தித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

Update: 2023-05-05 20:56 GMT

கருங்கல், 

கப்பியறை பேரூராட்சியில் கல்குவாரிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கவுன்சிலர்களை சந்தித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

உள்ளிருப்பு போராட்டம்

கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட புது காடுவெட்டி பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகாமையில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், நீர் பிடிப்பு பகுதிகள் ஆகியவை இருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை தருகிறது எனவும், இந்த குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இதனை கண்டுகொள்ளாமல் இந்த கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் கட்சிகள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் கல்குவாரியை மூடக்கோரியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 3-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3-வது நாளாக நீடிப்பு

நேற்றுமுன்தினம் 2 கட்டமாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கவுன்சிலர்கள் கைவிடவில்லை. இதனால் 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள் நாடியில் கருப்புத் துணி கட்டியிருந்தனர்.

இந்தநிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் அந்த பகுதிக்கு வந்தார். பின்னர் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து மதியம் பனை ஓலையில் கஞ்சி குடித்தார்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் கூறுகையில், இந்த போராட்டத்திற்கு 2 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படவில்லை எனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்