தஞ்சையில் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு அரசுப்பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், பிரசன்னா, சக்திவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளரும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான முத்து.உத்திராபதி, ஓய்வுபெற்ற நல்லாசிரியர் நாராயணசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, தனியார் பள்ளிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட வேண்டும். அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிலேயே மழலையர் வகுப்புகள் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) தொடங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.