காண்டூர் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அருகே காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி யார்? என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தளி,
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அருகே காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி யார்? என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 65 வயது முதல் 70 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் கால்வாய் கரை வழியே நடந்து சென்றனர். அப்போது அந்தபகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அந்த வயதான தம்பதியிடம் எங்கு இருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் கோவை என்று மட்டும் பதில் சொல்லியுள்ளனர். அதன்பின்னர் சுமார் ½ மணிநேரத்திற்கு பிறகு அவர்கள் 2 பேரின் உடல்களும் தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இது குறித்து தளி போலீசாருக்கும், உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், தீயணப்பு வீரர்களும் விரைந்து வந்து தம்பதியின் உடல்களை தேடினர். அப்போது அணைப்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் முதியவர் உடல் மீட்கப்பட்டது. ஆனால் மூதாட்டியின் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மூதாட்டியின் உடலும் அணையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அந்த உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல் வைக்கப்பட்டு உள்ளது.
யார் அவர்கள்?
அவர்கள் கோவை சேர்ந்தவர்கள் என்று கூறியதால் இறந்தவர்கள் குறித்த புகைப்படத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். இறந்தவர்கள் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? கடன் தொல்லையா? அல்லது குழந்தைகள் கைவிட்டு விட்டனரா? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் யார் என்று அடையாளம் தெரிந்தால்தான் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காரணம் தெரியவரும். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
----