8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுஆய்வு செய்த கலெக்டர்
வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சாலை அமைப்பது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
சாலை வசதி இல்லை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நெக்னாமலை ஊராட்சி. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இங்கு சாலை வசதி செய்யப்படவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி தலைமையில் வருவாய்த் துறை, வனத்துறை இணைந்து மண் சாலை அமைத்தனர். இதன் மூலம் தற்காலிகமாக இருசக்கர வாகனங்களும், இதர சிறிய வாகனங்களும் சென்று வந்தன. அதன் பின்பு அந்த சாலைக்கு தார் சாலை அமைப்பதற்கான எந்த வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் கடந்தசில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மண் சாலையில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டது. கடந்த 3-ந் தேதி மலைப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 23) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலையில் அவரை டோலிகட்டி 8 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதியில் தூக்கி வந்தனர்.
கலெக்டர் ஆய்வு
போதிய அடிப்படை வசதி இல்லாமல் உள்ள இந்த நெக்னாமலை கிராமத்திற்கு உடனடியாக முறையான சாலை வசதி ஏற்படுத்தித்தரக் கோரி வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் சட்டமன்றத்தில் கோரிக்கைவிடுத்தார். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடனடியாக மலை கிராமத்திற்கு சென்று சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் நேற்று காலை 8 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், போலீசார் 8 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். அதன் பின்னர் கோவில் வளாகத்தில் மலைப்பகுதி மக்களுடன் அமர்ந்து அவர்களிடம் அங்கு உள்ள குறைகளை கேட்டு அறிந்தார்.
ஆய்வுக்கு பின்னர் மலையடிவாரப் பகுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு பாதையில் சாலை
நெக்னாமலை பகுதியில் கர்ப்பிணி ஒருவரை டோலி கட்டி தூக்கி வந்ததை அறிந்த முதல்-அமைச்சர் உடனடியாக அந்த மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருமாறு அறிவுறுத்தி இருந்தார். இந்த மலை கிராமத்திற்கு மூன்று வழிகள் உள்ளது. இரண்டு பாதைகள் ஒற்றையடி பாதையாக உள்ளது. கொத்தகோட்டை வழியாக செல்லும் பாதையில் மட்டுமே சாலை வசதி செய்யமுடியும். இந்த பகுதியில் சாலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட திட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் உடன் இருந்தனர்.