தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2023-10-16 18:45 GMT

தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எனவும், மீதமுள்ள 6 நாட்களில் சுழற்சி முறையில் விசைப்படகுகளை இயக்குவது எனவும் முடிவு செய்தனர்.

இதனால் ஒரு விசைப்படகில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க செல்லும் நிலை ஏற்பட்டது. அனைத்து விசைப்படகுகளிலும் தினமும் மீன்பிடிக்க செல்லும்போது, போதுமான மீன்கள் கிடைக்கவில்லை என்றும், இதனால் செலவு அதிகரிப்பதாகவும் உரிமையாளர்கள் கூறினர்.

வேலைநிறுத்தம்

இதற்கிடையே விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க சென்றால்தான் தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றும், ஆகையால் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனை வலியுறுத்தி கடந்த 10-ந்தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தம் நீடித்தது. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்றதால், மீன்களின் வரத்து குறைந்த நிலையில், அவற்றின் விலை உயர்ந்தது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்த நிலையில் தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இடையே மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கடந்த 14-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வழக்கம்போல் வாரத்தில் 6 நாட்களும் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலையில் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 208 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். இதனால் மீண்டும் மீன்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்