2 ஆண்டுக்கு பிறகு ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

2 ஆண்டுக்கு பிறகு ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Update: 2022-06-24 20:51 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் 2 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கப்பட்டு, 11-ந்தேதி மாலை கொடியேற்றப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.

சந்தனக்கூடு ஊர்வலம்

ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் சந்தனக்கூடு புறப்பட்டு ஊர்வலமாக சென்று காலை 6 மணி அளவில் தர்காவை வந்தடைந்தது. இந்த சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அதன்பின் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவடைந்தது.

நேர்ச்சை

வருகிற 30-ந்தேதி கொடியிறக்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சை வழங்கி விழா நிறைவடையும் என்று ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்