14 ஆண்டுகளுக்கு பிறகு தாயை பார்த்ததும் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் சிந்திய மகள்

14 ஆண்டுகளுக்கு பிறகு தாயை பார்த்ததும் மகள் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் விட்டார்.

Update: 2022-11-03 17:45 GMT

திருப்பத்தூர்

14 ஆண்டுகளுக்கு பிறகு தாயை பார்த்ததும் மகள் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் விட்டார்.

மறுவாழ்வு இல்லம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றி திரிந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பெண்ணை மீட்டு திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு மெல்லமெல்ல நினைவு திரும்பியதையடுத்து தனது பெயர் சின்னபொண்ணு என்ற ஜெயப்பிரியா எனவும், விழுப்புரம் மாவட்டம், வி.பரங்கணை என்ற கிராமத்தில் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டு அவரது மகள் டீனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருப்பத்தூர் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக தலைவர் ரமேஷ் முன்னிலையில், சின்னபொண்ணுவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து நன்றாக பார்த்துகொள்ளும்படி ஆலோசனை வழங்கினர்.

ஆனந்த கண்ணீர்

பல வருடங்களுக்கு பிறகு தனது தாயை பார்த்த மகிழ்ச்சியில் டீனா சின்னபொண்ணுவை கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் விட்டு அங்கிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அப்போது மகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தாயார் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நானும் எனது சகோதரரும் பெரியம்மா வீட்டில் வளர்ந்தோம். 14 வருடங்களுக்கு முன்பு எங்களது தாயாரை காணவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எங்களின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நாங்கள் தாய், தந்தை இல்லாத அனாதை ஆகிவிட்டோம் என்று தினம் தினம் அழுது கொண்டே இருந்தோம்.

இந்த நிலையில் திடீரென எங்கள் தாயார் இருக்கும் தகவல் கிடைத்ததால் எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் தாயாரை எங்களுடன் சேர்த்து வைத்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்