பெருமாள் கோவிலுக்கு செல்ல 100 ஆண்டுகளுக்கு பிறகுஆதிதிராவிடர்களுக்கு அனுமதி

கள்ளக்குறிச்சி அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் கோவிலுக்கு செல்ல ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-01-02 18:45 GMT


கச்சிராயப்பாளையம்

ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி இல்லை

கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பாளையக்காரர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி கிடையாது.

இதனிடையே கடந்த 1959-ம் ஆண்டு இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இதன் பிறகும் பாளையக்காரர்கள் காலத்தில் இருந்த வழக்கப்படியே உயர் சாதியினர் மட்டுமே சாமி தரிசனம் செய்து வந்தனர். ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம்

எனவே பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கக்கோரி தமிழக அரசுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கும் ஆதிதிராவிடர்கள் மனு கொடுத்தனர். இது தொடர்பாக உயர் சாதியினருடன் அதிகாரிகள் பல கட்டமாக நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இருப்பினும் வைகுண்ட ஏகாதசி முதல் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதேசமயம் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்படடது.

இந்த நிலையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.பாண்டியன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் பகலவன், ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆதிதிராவிடர்கள் பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நூறாண்டு கனவு நிறைவேறி உள்ளது

இது குறித்து ஆதிதிராவிடர்கள் கூறுகையில், கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கேள்விப்படும்போது அதில் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு இருந்து வந்தது. இதற்காக 100 ஆண்டுகளுக்கு மேல் போராடி வந்த எங்களுக்கு தற்போது வைகுண்ட ஏகாதசி அன்று சாமி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் எங்களின் நூறாண்டு கனவு தற்போதுதான் நிறைவேறி இருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தொிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

தொடா்ந்து அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்