10 ஆண்டுகளுக்கு பின்னர் மார்லிமந்து அணை நிரம்பியது

ஊட்டியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மார்லிமந்து அணை நிரம்பியது.

Update: 2022-09-05 15:22 GMT

ஊட்டி, 

ஊட்டியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மார்லிமந்து அணை நிரம்பியது.

மார்லிமந்து அணை

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கடைகள் என 4,000 வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர் நகராட்சி மூலம் வினியோகிக்கப்படுகிறது.

பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, கிளன்ராக் ஆகிய அணைகள் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஊட்டி நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இதுவரை 100 சதவீதத்துக்கு அதிகமாக பதிவாகி உள்ளது. தொடர் மழையால் நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

தொடர் மழை காரணமாக ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டது. தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், மார்லிமந்து அணைக்கு வரும் பவுட்டா கால்வாய், ஸ்னோடவுன் கால்வாய் 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்லிமந்து அணை 23 அடி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்த அணை மூலம் 7 வார்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 50 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 48 அடியாகவும், 39 அடி கொள்ளளவான டைகர்ஹில் அணையில் 39 அடியாகவும், 12 அடி கொள்ளளவு கொண்ட கோடப்பமந்து அணையில் 12 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது. இதனால் வருகிற நாட்களில் ஊட்டி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்