10 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

10 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-26 22:23 GMT

கடத்தூர்

10 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி தடுப்பணை

கோபியில் உள்ள கொடிவேரி தடுப்பணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஈரோடு மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கொடிவேரி தடுப்பணைக்கு குடும்பத்துடன் வருவார்கள்.

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஆனந்தமாய் குளித்துவிட்டு, கரையில் விற்பனை செய்யப்படும் வறுத்த மீன்களை வாங்கி ருசிப்பார்கள்.

வெள்ளப்பெருக்கு

இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து கொடிவேரி அணையில் பாறைகளே தெரியாத அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதனால் கடந்த 10 நாட்களாக கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

குளிக்க அனுமதி

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு குறைந்துவிட்டது.

இதையடுத்து கடந்து 10 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்