மகனின் உடல் நிலை பாதிப்பு: காலிங்கராயன் தடுப்பணையில் குதித்து தாய் தற்கொலை

மகனின் உடல் நிலை பாதிப்பு: ஏற்பட்டதால் காலிங்கராயன் தடுப்பணையில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டாா்

Update: 2023-04-20 20:55 GMT

பவானி அருகே மகனின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காலிங்கராயன் தடுப்பணையில் குதித்து அவருடைய தாய் தற்கொலை செய்து கொண்டார்.

உடல் நலம் சரியாகவில்லை

பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் பவானியை அடுத்த குப்பநாயக்கன்பாளைத்தில் உள்ள தொடக்க வேளாண்மை விதைப்பண்ணையில் வேளாண் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி. குமாரசாமியின் தாய் சரஸ்வதி (வயது 70).

கடந்த ஒரு ஆண்டாக குமாரசாமிக்கு உடல் நலம் சரியில்லை. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் குணமாகவில்லை. மேலும் வீட்டில் இருந்தே குமாரசாமி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரஸ்வதி பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.

தடுப்பணையில் குதித்தார்

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சரஸ்வதி வெளியேறினார். இதனால் அவருடைய மருமகள் சுமதி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்தது தெரியவந்ததும், சுமதி அங்கு சென்று சரஸ்வதியை வீட்டுக்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சரஸ்வதி, வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் அருகில் உள்ள காலிங்கராயன் தடுப்பணை பகுதிக்கு சென்று அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் குதித்தார்.

சாவு

இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று சரஸ்வதியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சரஸ்வதியின் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து சரஸ்வதியின் உடலை சித்தோடு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்