இயற்ைக சீற்றங்களில் பாதிக்கப்படும் தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள்- விவசாயிகளுக்கு, வேளாண்துறை அழைப்பு

இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு, வேளாண்துறை அழைப்பு விடுத்து உள்ளார்கள்.

Update: 2022-08-24 15:54 GMT

சுல்தான்பேட்டை

இயற்ைக சீற்றங்களில் பாதிக்கப்படும் தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு, வேளாண்துறை அழைப்பு விடுத்து உள்ளார்கள்.

காப்பீடு செய்ய அழைப்பு

இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கன மழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனை மரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம். இதுகுறித்து சுல்தான்பேட்டை வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தென்னை, பனைமர காப்பீட்டு திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4-ம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் 60 ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை காப்பீடு செய்யலாம். ஒரு ஹெக்டருக்கு 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு ரூ.2.25 -ம், 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு ரூ.3.50-ம் தவணை தொகையாக செலுத்த வேண்டும்.

முன்மொழிவு படிவம்

தவணை தொகைக்கான வரைவோலையை(டிடி) அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் -சென்னை என்ற பெயரில் எடுக்க வேண்டும். 4 வயது முதல் 15 வயது வரை உள்ள மரங்களுக்கு காப்பீட்டு தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.900, 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு தலா ரூ.1,750 வழங்கப்படும். காப்பீடு செய்வதற்கு முன்மொழிவு படிவத்துடன் ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயிகளின் புகைப்படம் மற்றும் சுய அறிவிப்பு கடிதம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனரின் காப்பீட்டு திட்டத்திற்கான சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், காப்பீட்டுக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பல்வேறு விவசாய பயிர்களுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்