அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அர்ஜூன் சம்பத்துக்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு

டாக்டர் அம்பேத்கரை இந்துவாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதால், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அர்ஜூன் சம்பத்துக்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை வெளியேற்றினர்.

Update: 2022-12-06 23:02 GMT

சென்னை,

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து மக்கள் கட்சி சார்பில் நிர்வாகி அருண்குமார், பட்டினம்பாக்கம் போலீசுக்கு அளித்துள்ள உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "தனி நபருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப மாட்டோம். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்த மாட்டோம். அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை, காவி துண்டு போடமாட்டோம். விபூதி மற்றும் குங்குமம் வைக்க மாட்டோம். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டோம்" என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில், அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி வழங்கியும், அவருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

வக்கீல்கள் எதிர்ப்பு

இதற்கிடையே ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மரியாதை செலுத்த முயற்சித்தார். அப்போது அங்கிருந்த வக்கீல்கள், டாக்டர் அம்பேத்கருக்கு காவி சட்டையும், நெற்றியில் திருநீறு பட்டையையும் போட்டு, அவரை இந்துவாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய அர்ஜூன் சம்பத், மரியாதை செலுத்தக் கூடாது என்று தடுத்து கோஷமிட்டனர்.

இதை கண்டித்து அர்ஜூன் சம்பத் சிலைக்கு கீழேஉட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு தயாராக இருந்த போலீசார், அவரை சுற்றி நின்று பாதுகாத்தனர். அதற்குள் ஏராளமான வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் பாதுகாப்பாக அர்ஜூன் சம்பத்தை ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்