வக்கீல்கள் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
வக்கீல்கள் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். கட்சிக்காரர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.
காட்பாடி
வக்கீல்கள் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். கட்சிக்காரர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.
தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி
சென்னை சட்டக் கல்வி இயக்குனர் ஜெ.விஜயலட்சுமி அறிவுரையின் பேரில் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளில் இருந்து 18 அணிகளை சேர்ந்த 54 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவிற்கு வந்தவர்களை சட்டக் கல்லூரி முதல்வர் ஜி. ஜெயகவுரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கு சட்டம் பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
வி.ஐ.டி. வேந்தர் ஜி. விசுவநாதன் பேசியதாவது:-
ஆதரவாக இருக்க வேண்டும்
வக்கீல் தொழில் மிக மிக முக்கியமான தொழிலாகும். ஏழைகளை பாதுகாக்க வேண்டிய பணி வக்கீல்களுக்கு தான் உண்டு. மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் நாடுவது கோர்ட்டுகளைதான். இந்தியாவில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருவர் கோர்ட்டுக்கு வழக்குக்காக சென்றால் அது எத்தனை ஆண்டுகளில் முடியும் என தெரியாது. அவர் தன்னுடைய மகன் அல்லது மகளிடம் வழக்கை ஒப்படைத்துவிட்டு செல்வார். இதில் முக்கியமான ஒன்று காலதாமதம். மற்றொன்று வழக்கிற்கு ஆகும் செலவு. வக்கீல் என்பது தொழில் மட்டும் அல்ல. பலருடைய உரிமைகளை பெற்றுத்தருவது.
மாதிரி நீதிமன்றத்தை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வக்கீல்கள் கட்சிக்காரர்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். வக்கீல் தொழில் நல்ல தொழில். ஆரம்பத்தில் மிக கடினமானது. ஒரு முறை நீங்கள் வெற்றி பெற்று விட்டால் உங்களைத் தேடி வழக்குகள் வரும். ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல்கள் குறைவாக உள்ளனர். அந்த இடத்தை நீங்கள் நிரப்ப வேண்டும்.
இவர் அவர் பேசினார்.
விழாவில் மூத்த வக்கீல் டி.எம்.விஜய ராகவலு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவை உதவி பேராசிரியர் ஜெயரேவதி தொகுத்து வழங்கினார். இன்று (சனிக்கிழமை) பகல் 3 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரா.சுப்பிரமணியன், சி.சரவணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.