வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
சாத்தான்குளத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த கோர்ட்டு பெண் வக்கீலுக்கு கொலை மிரட்டல் கொடுத்து வரும் குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் சங்கம் சார்பாக நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத் தலைவர் கல்யாண் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜேம்ஸ், நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் அருண் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் 8 பெண்கள் உட்பட 61 வக்கீல்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தில் பெண் வக்கீலை மிரட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த வக்கீலும் ஜாமீன் மனு போடக்கூடாது எனவும், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வரை பல்வேறு போராட்டம் நடத்தப்படும் என்றும், தற்போது சாத்தான்குளம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.