போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்
கீழக்கரை
கீழக்கரையில் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் முஸ்லிம் பஜார் சாலைகளில் பெருகி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் நெய்னாமுகமது, நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, கவுன்சிலர்கள் மீரான் அலி, சுஐபு, நமது கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி துணை தலைவர் சாகுல் ஹமீது உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. முக்குரோட்டில் இருந்து கடற்கரை பழைய பஸ் நிலையம் வரை ஒரு புறம் பார்க்கிங் ஏற்படுத்துவதும், போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலை 8 மணி முதல் 11 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் வெளியூர் ஆம்னி பஸ் மற்றும் கனரக வாகனங்கள் ஊருக்குள் செல்லாமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. ஆட்டோக்களை குறிப்பிட்ட ஆட்டோ ஸ்டாண்டுகளில் மட்டுமே நிறுத்த வேண்டுமெனவும், குறிப்பிட்ட ஸ்டாண்டுகளிலோ அல்லது போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாத பகுதிகளிலோ ஆட்டோக்களை நிறுத்துவதற்கு அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டது. காவல்துறை, வருவாய்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உதவி கலெக்டர் நாராயணன் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து கீழக்கரை முழுவதும் உதவி கலெக்டர் நாராயணன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.