சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தனிப்பிரிவு போலீசார் திறம்பட பணியாற்ற அறிவுரை

சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தனிப்பிரிவு போலீசார் திறம்பட பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரை வழங்கினார்.

Update: 2023-01-21 17:54 GMT


சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தனிப்பிரிவு போலீசார் திறம்பட பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி அறிவுரை வழங்கினார்.

பயிற்சி வகுப்பு

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் 41 தனிப்பிரிவு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. தனிப்பிரிவு பயிற்சி பள்ளியில் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தன் பயிற்சி வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் முன்னிலை வகித்தார்.

பயிற்சியை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி தொடங்கி வைத்து அறிவுரைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு கண், காதுமாக இருக்க வேண்டியவர்கள் தனிப்பிரிவு காவலர்கள்.

தனிப்பிரிவு காவலர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

அந்த தகவல் சரியானதா? தவறானதா? என்பதை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கக்கூடாது. அதை உடனடியாக தெரிவிப்பது தான் முக்கியம்.

திறம்பட பணியாற்ற வேண்டும்

சாதி- மதம் போன்ற சமூக பிரச்சினைகளை ஏற்படுவதை தடுக்க ஆரம்பகட்ட நிலையிலேயே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தயக்கமில்லாத அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். அதுகுறித்து நீங்களே முடிவெடுத்து விடக்கூடாது. காவல் நிலையத்துக்கு வராத பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை கண்டறிந்து மாவட்ட காவல்துறை கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். முனைப்புடன் தகவல் சேகரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் திறம்பட பணியாற்ற வேண்டும்.

பிரச்சினைகளில் ஈடுபடுவர்களின் மனதின் எண்ண ஓட்டத்தை கணித்து எதிர்கால பிரச்சினைகள் ஏற்படக்கூடுமா? என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்