புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ைண வீட்டில் ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகளை அவர் நியமித்து வருகிறார். அவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க கைலாசப்பட்டி பண்ணை வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்திபாண்டி தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது பண்ணை வீட்டில் இன்று சந்தித்தனர். இதேபோல் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் சுப்புரத்தினம் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் வைகை பாலா (தெற்கு), பசும்பொன் (மேற்கு), சுப்பிரமணி (கிழக்கு), ஈரோடு மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகளும் வந்திருந்தனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே திருப்பூர், கரூர், சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.