நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகள் நியமனம் பற்றி ஆலோசனை -தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் வரும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமனம் செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

Update: 2023-07-28 19:11 GMT

சென்னை,

செங்கல்பட்டு உள்ளிட்ட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குட்பட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அடிப்படை ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் ஆகியவற்றின் இருப்பு குறித்து மாநிலங்கள் அளவில் ஆய்வு மற்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகின்றன.

புதிய மாவட்டங்கள்

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி என்ற வகையில் தேர்தல் கமிஷன் நியமனம் செய்து வருகிறது.

ஆனால் இந்த புதிய மாவட்டங்களை உள்ளடக்கி வரும் நாடாளுமன்ற தொகுதிகளின் சில பகுதிகள் 2 மாவட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் வந்தன. அந்த மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, காஞ்சீபுரத்துக்கு மாவட்ட கலெக்டரே தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு காஞ்சீபுரம் டி.ஆர்.ஓ. தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.

தெளிவற்ற நிலை

தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல பகுதிகள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டன. காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சில பகுதிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பான்மை பகுதிகள் போன்றவை செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.

இதனால் நாடாளுமன்ற தேர்தலின்போது அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக எந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரியை நியமிப்பது? என்பதில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரக்கோணம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 7 தொகுதிகளுக்கும் இந்த தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

ஆலோசித்து முடிவு

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

7 தொகுதிகளில் எழுந்துள்ள இந்த பிரச்சினை குறித்து தற்போது கடிதம் வரப்பெற்றுள்ளது. நிலவியல் அடிப்படையிலும், மக்கள் தொகை, பாக விவரங்களை ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். பின்னர் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று அந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக முழுமையாக ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்