கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு

தேனி மாவட்டத்தில் புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

Update: 2023-04-07 19:00 GMT

புனிதவெள்ளி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு கடைபிடிக்கிறார்கள். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி சாம்பல் புதனுடன் தவக்கால நோன்பை கிறிஸ்தவர்கள் தொடங்கினர்.

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

சிலுவைப்பாதை

அதன்படி, தேனி பங்களாமேட்டில் உள்ள ஆர்.சி. உலக மீட்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது, இயேசு சிலுவை அனுபவித்த துன்பங்களை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்பட்டது. ஆலய வளாகத்தில் சிலுவையை கிறிஸ்தவர்கள் சுமந்து சென்று வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்திலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அதுபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டியில் பழமை வாய்ந்த அடைக்கல மாதா தேவாலத்தில் நேற்று முன்தினம் புனித வியாழனையொட்டி தேனி பங்குத்தந்தை முத்து கலந்துகொண்டு 12 சீடர்களுக்கு பாதம் கழுவும் சடங்கை செய்தார். அதனைத்தொடர்ந்து திருவிருந்து நிகழ்ச்சியும், நற்கருணை ஆராதனையும், நற்கருணை இடமாற்ற பவனியும் நடைபெற்றது.

நேற்று புனித வெள்ளியையொட்டி தேவாலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை அமைதியான முறையில் நற்கருணை ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்வுகளும், ஆண்டவரின் திருப்பாடுகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

கம்பம்

கம்பம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ் தலைமையில் சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெற்றது. சிலுவையை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தை சுற்றி வந்தனர். அங்கு 14 இடங்களில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அருட்பணி தங்கராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்