மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு

பா.ஜனதாவுடனான கூட்டணி முறிந்த நிலையில் கோவை வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.

Update: 2023-10-03 20:49 GMT

கோவை,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணாவை குறித்து பேசிய கருத்தால் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவால் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை தொடர பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிர்மலா சீதாராமன் கோவை வருகை

அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவை தொடர்ந்து தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு தேசிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

தொடர்ந்து நேற்று காலை கோவை கொடிசியாவில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொடிசியா வந்தார். அங்கு அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), அமுல்கந்தசாமி (வால்பாறை), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்) ஆகியோர் திடீரென சந்தித்தனர்.

அப்போது நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொத்து கொடுத்து அவர்கள் வரவேற்றனர். அப்போது கோவை தெற்கு தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

பின்னர் கொடிசியாவில் நடந்த கடன் வழங்கும் விழாவிலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று பேசினர்.

கூட்டணி குறித்து பேசவில்லை

- பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

விழா முடிந்ததும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மாதம் டெல்லி சென்று தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு கொடுத்தோம். அந்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். தென்னை விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மனு கொடுத்தோம். இதில் வேறு எந்த அரசியல் காரணங்களும் கிடையாது. மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் தென்னை விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே வந்திருக்கிறோம்.

இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை. தென்னை விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மட்டுமே பேசப்பட்டது கூட்டணி குறித்து கட்சி பொதுச்செயலாளர் தான் முடிவு எடுப்பார். இது அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது. கூட்டணிக்கும், இந்த சந்திப்புக்கும் சம்பந்தமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்