அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கார் மோதி பலி

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பியபோது அன்னவாசல் ஒன்றிய கவுன்சிலர் கார் மோதி பலியானார்.

Update: 2023-08-19 18:30 GMT

அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பணம்பட்டி மருதாந்தலையை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 55). அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரான இவர், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், நிலவள வங்கி தலைவராகவும் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டு முன் ஏற்பாடுகளை பார்ப்பதற்காக சாம்பசிவம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் ஒரு காரில் நேற்று முன்தினம் அன்னவாசலில் இருந்து மதுரைக்கு சென்றார்.

பின்னர் மாநாட்டு ஏற்பாடுகளை பார்த்து விட்டு அன்று இரவு அதே காரில் அன்னவாசலுக்கு திரும்பி கொண்டு இருந்தார். இந்தநிலையில் காரில் வரும்போது சாம்பசிவம் தனது மகனுக்கு போன் செய்து தனது காரை எடுத்துக்கொண்டு முத்துடையான்பட்டி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்துவிடுமாறு கூறியுள்ளார்.

கார் மோதி பலி

இதையடுத்து, அவரது மகன் காரை எடுத்துக்கொண்டு அங்கு வந்து நின்றுள்ளார். பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் காரில் வந்து இறங்கிய சாம்பசிவம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இறங்கி தனது மகன் வந்த காரில் செல்வதற்காக புதுக்கோட்டை-திருச்சி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று சாம்பசிவம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாம்பசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலி

விபத்தில் அன்னவாசல் ஒன்றிய கவுன்சிலர் சாம்பசிவம் இறந்ததை அறிந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் சாம்பசிவத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வைக்கப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கண்ணீர் மல்க அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறந்த சாம்பசிவத்திற்கு லட்சுமி என்ற மனைவியும், 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்