அ.தி.மு.க. ஒற்றை தலைமை : யார் கை ஓங்கும்...? ஓ.பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சி தீவிரம்

நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் இந்த கூட்டம் நீடித்தது.

Update: 2022-06-15 09:04 GMT

சென்னை

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழன்) சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர்.

பொதுக்குழு கூட்டத்தில் யார்-யாரை பேச அழைப்பது, என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த முறை கூடும் பொதுக்குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் குறித்து பலர் கண்டிப்பாக பேசுவார்கள். அது மட்டு மல்ல சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படும். ஒற்றை தலைமை கோஷத்தை யாராவது எழுப்பினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.]]

மாவட்ட கழக செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கட்டளையி டப்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்த குழுவுக்கு பதிலாக உயர் மட்டக்குழு உருவாக்க படக்கூடும் என தெரிகிறது.

சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதை தடுக்க அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் இந்த கூட்டம் நீடித்தது.

இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற தலைமை கழகத்திற்கு வெளியே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி கோஷம் எழுப்பினர்.இதையடுத்து, அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருந்த நிர்வாகிகள், அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பேசிய முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, 'அ.தி.மு.க. வலுவாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும்' என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.என்றாலும், கூட்டத்தில் அடுத்தடுத்து பேசவந்த அனைவரும் ஒற்றைத் தலைமை பற்றியே பேசினார்கள். இதனால் கூட்டத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. ஜே.சி.பி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைகை செல்வன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், 'ஒற்றைத் தலைமை பற்றி இப்போது பேசவேண்டாம். பொதுக்குழுவை நடத்துவது பற்றி பேசுங்கள்' என்றார். ஆனால் பெரும்பாலான அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒற்றை தலைமைதான் கட்சிக்கு நல்லது என்ற கருத்தை வெளியிட்டனர்.

குறிப்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார் போன்றவர்கள் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியதால், ஓ.பன்னீர்செல்வம் மவுனமாக பரர்த்துக்கொண்டே இருந்தார்.

அப்போது சூழ்நிலையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி எழுந்து, 'ஒற்றைத் தலைமை பற்றி நாங்கள் பேசி முடிவு செய்து கொள்கிறோம்' என்றார். அதன்பிறகுதான் ஆலோசனை கூட்டத்தில் ஆவேசமும், சூடும் குறைந்தது. பொதுக்குழுவில் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்தனர்.

வருகின்ற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை என்ற கொள்கை முடிவு எடுப்பதோடு, யார் ஒற்றைத்தலைமை என்று இறுதி செய்ய வேண்டும் கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்,

ஒற்றைத் தலைமைக்கு வரப்போவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது ஓ.பன்னீர்செல்வமா? என்ற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கட்சியில் ஏற்படும் சிறு சிறு தகராறுகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்ற கருத்து அ.தி.மு.க.வில் 99 சதவீதம் பேரிடம் நிலவுகிறது.

அவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் வரை எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்புவது நேற்று நடந்த கூட்டத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே விரும்புகிறார்கள்.

அ.தி.மு.க.வில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு ஒற்றைத் தலைமை நிலை உருவானால் அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதற்கு அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்வு ஏற்படுமா? என்பது 23-ந் தேதிதான் தெரியும்.

மற்றொரு பக்கம் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்த முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய அவரது ஆதரவாளர்கள் திடீரென ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஓ. பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வில் சண்டை வேண்டாம், சமாதானமாக போய்விடலாம் என்ற ரீதியில் இந்த சமாதானம் நடந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எத்தகைய முடிவு எடுக்கப்படும் என தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்