விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டங்கள் முடக்கம்- காமராஜ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக காமராஜ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டி உள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக காமராஜ் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டி உள்ளார்.
பொதுக்கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெருவில், நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், செருகுடி ராஜேந்திரன், அன்பழகன், ராம.குணசேகரன், சேகர், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயலட்சுமி குணசேகரன் (நன்னிலம்), கிளாரா செந்தில் (குடவாசல்), மாநில உணவு ஆணைய உறுப்பினர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாமானிய மக்களின் வளர்ச்சிக்காக...
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.-வை உருவாக்கியபோது இந்த கட்சி 100 நாள் நீடிக்குமா? என கருணாநிதி விமர்சித்தார். ஆனால் இன்று 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அ.தி.மு.க. 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்து, பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சாமானிய மக்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 20 மாத ஆட்சி காலத்தில் தி.மு.க. எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாமல், அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களுக்கு மட்டுமே திறப்பு விழா நடத்தி வருகிறார்கள்.
நலத்திட்டங்கள் முடக்கம்
தாலிக்கு தங்கம், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டங்கள், குறுவை-சம்பா சாகுபடி சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டம் போன்ற நலத்திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தியது.
ஆனால் அத்தகையை நலத்திட்டங்கள் தற்போதைய தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் முடக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு புதிய திட்டங்களையும் செயல்படுத்தாத தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இல்லா விட்டாலும் மக்கள் நலனுக்காக போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. பேச்சாளர்கள் பெரியசாமி, சுந்தரம், ராஜேந்திரன், ஒன்றியக்்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், கீதா ரவிச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஜெயபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெய இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், முனுசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார், இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் சங்கர், நகர செயலாளர் மதுசூதனன், பேரூராட்சி உறுப்பினர் அருள்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் இளவரசன் நன்றி கூறினார்.