தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கண்டித்து நேற்று தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் வரி போடமாட்டோம் என்றார்கள். ஆனால் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி விட்டனர். தற்போது மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.மக்களுக்கு நல்லாட்சி தருவேன் என்று கூறிக் கொண்டு மக்களை துன்புறுத்தி வருகின்றனர் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆறுமுகநயினார், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ் ஆறுமுகநேரி முன்னாள் நகர செயலாளர் அரசகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.