அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து கடலூரில், நடந்த அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றார்.

Update: 2022-09-16 18:58 GMT

மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 16-ந்தேதி (அதாவது நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மஞ்சக் குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான எம்.சி.தாமோதரன், மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார்.

மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தம்

முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகளாக மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் அதிக அளவு மின்வெட்டு இருக்கிறது. இதில் மின்கட்டணத்தையும் உயர்த்தி இருக்கின்றனர்.

மேலும் அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியது தான் இந்த 15 மாத தி.மு.க. அரசின் சாதனை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு என பல வரிகளை உயர்த்தி மக்களிடம் பணச் சுமையை ஏற்படுத்திய தி.மு.க. தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்களின் மனச்சுமையை உயர்த்தி இருக்கிறது. அதனால் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.வை மக்கள் புறந்தள்ளும் காலம் வெகு விரைவில் நாடாளுமன்றத் தேர்தலில் வரும் என்றார்.இதில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் தெய்வ.பக்கிரி, முன்னாள் நகர மன்ற தலைவர் சி.கே.சுப்பிரமணியன், கடலூர் மாநகர பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வ.கந்தன், ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மருத்துவ அணி செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் குமுதம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்