கோவையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து கோவையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்கட்டண உயர்வை கண்டித்து கோவையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உயர்த்தப்பட்டு உள்ள மின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காலையில் இருந்தே ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குறைக்க வேண்டும்
அ.தி.மு.க. ஆட்சியின்போது மத்திய அரசு மின்கட்டணம், சொத்துவரி ஆகியவற்றை உயர்த்த சொன்னது. அப்படி உயர்த்தினால்தான் மாநிலங்களுக்கு கொடுக்கக்கூடிய சில சலுகைகளை கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் உயர்த்தவில்லை. 4½ ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்தார்.
ஆனால் தி.மு.க. அரசு ஆட்சியில் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மின்கட்டணம், சொத்துவரியை உயர்த்தி உள்ளார்கள். இந்த கட்டண உயர்வுகளை உடனடியாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மின்வெட்டு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சில வாரங்களிலேயே மின்வெட்டு தொடங்கிவிட்டது. இதனால் பலர் வேறு மாநிலங்களுக்கு தொழில் தொடங்க சென்றுவிட்டனர். அதுபோன்று தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எனவே தமிழக அரசு பொது மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். அத்துடன் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் சிங்கை முத்து, பொருளாளர் பார்த்திபன், பகுதி செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், ராஜ்குமார், கவுன்சிலர் பிரபாகர், பேச்சாளர் கல்யாண சுந்தரம், செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.