கவியரங்கம், கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகல ஏற்பாடுகள் இன்று அ.தி.மு.க. மாநாடு மதுரையில் தொண்டர்கள் குவிந்தனர் 3 ஆயிரம் பேர் அணிவகுப்புடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது.

Update: 2023-08-19 19:45 GMT


அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது.

ஏற்பாடுகள் தயார்

மாநாட்டை முன்னிட்டு மதுரை வலையங்குளம் அருகே ரிங்ரோடு பகுதியில் விசாலமான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதை சமப்படுத்தி, பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அங்கு சென்று அந்த பணிகளை மேற்பார்வை செய்தனர். கடந்த ஒரு மாதமாக அங்கு மாநாட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

மாநாட்டின் முகப்பானது கோட்டை போன்றும், அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ அமைப்புகளும் அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி படமும் வைக்கப்பட்டு இருக்கிறது.

லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கான இருக்கைகள் போடப்பட்டன. மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் பணிகளும் நேற்று நிறைவு பெற்று அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தொண்டர்கள் குவிந்தனர்

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் நேற்று காலை முதலே மதுரைக்கு வர தொடங்கினர்.

பஸ், வேன், கார் போன்ற வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் வந்தவர்கள் ஏராளமானோர் மாநாட்டு பந்தலை பார்ப்பதற்காக ஆர்வமாக வந்தனர். மாநாட்டு திடலில் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மாநாட்டு திடல் வழியாக ெசன்ற பொதுமக்களும் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலை ஓரமாக நிறுத்திவிட்டு மாநாட்டு திடலை கண்டு களித்து சென்றனர். அந்த கூட்டத்தை பார்க்கும் போது மாநாடு நேற்றே தொடங்கி விட்டதுபோல் உள்ளது என்று கட்சி தலைவர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

சிறப்பு ரெயில்

சென்னையில் இருந்து அ.திமு.க. தொண்டர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரெயில் நேற்று காலை மதுரை வந்தது. அந்த ரெயில் கூடல்புதூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ரெயிலில் இருந்து உற்சாகமாக இறங்கிய தொண்டர்கள் பின்னர், தங்கும் விடுதிகளுக்கு சென்றனர்.

தொண்டர்களின் படையெடுப்பால், மதுரை நகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மண்டபங்கள் நிரம்பி வழிகின்றன.

3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுப்பு

இன்று நடக்கும் அ.தி.மு.க. மாநில மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8.45 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தொடங்கி 51-ம் ஆண்டினை குறிக்கும் விதமாக 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றுகிறார்.

அதன்பின் ஜெயலலிதா பேரவை சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு, 3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுத்து வந்து மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கின்றனர்.

சாதனை விளக்க கண்காட்சி

அதனைத்தொடர்ந்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இந்த கண்காட்சி அரங்கத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்களும், முக்கிய திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளன.

கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம்

மாநாட்டு திடலில், கலை நிகழ்ச்சிகள், கவியரங்குகள் என தொடர்ந்து நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.

செல்லூர் ராஜூ உள்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.

மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு தலைமை உரை நிகழ்த்துகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கால திட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அவர் பேசுகிறார். அதன்பின் நன்றியுரையுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

விழாக்கோலம்

இந்த மாநாட்டு திடல், 65 ஏக்கர் பரப்பிலானது. இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எனவே அவர்கள் அனைவருக்கும் 3 வேளையும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மாநாட்டிற்கு வருபவர்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சைவ உணவு பரிமாறப்படுகிறது. அதற்காக 150-க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவு தயாரிக்கும் பணியில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர். காய்கறிகள் நறுக்கும் பணி, விதவிதமான உணவுகள் சமைக்்கும் பணி என நேற்று பகலிலும், இரவிலும் நடந்தது.

உணவு வழங்கப்படும் பந்தலில் நெரிசல் இன்றி தொண்டர்களுக்கு பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும் போதிய ஆட்கள் உள்ளதாகவும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று இரவில் மாநாட்டு வளாகம் மின்ெனாளியில் ஜொலித்தது. தொண்டர்கள் குவிந்ததால் மாநாட்டு வளாகம் களைகட்டி அந்த பகுதியே விழாக்கோலத்துடன் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்