அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

ஒற்றை தலைமை விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-06-20 23:48 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருப்பதால், அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பொதுக்குழுவில் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக வெளியாகும் தகவல்களால் கலக்கம் அடைந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவரது இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் இணைந்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்...

வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த 14-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் - நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள். கூட்டம் அழைக்கப்பட்டதின் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு, முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

பொதுவாக கட்சியின் பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், வாரிய தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பது நமது கட்சியில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம்

இந்த நடைமுறை, 23-ந்தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கட்சியின் தொண்டர்கள் எங்களை தொலைபேசி மூலமாகவும், நேரிலும் சந்தித்து சிறப்பு அழைப்பாளர்களாக தங்களையும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். ஜெயலலிதா, இதே மண்டபத்தில் பலமுறை கட்சியின் பொதுக்குழுவை நடத்தியபோதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். இப்போது அதே மண்டபத்தில் இடமில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று தங்களது ஆதங்கத்தை தெரியப்படுத்துகிறார்கள்.

இதுமட்டுமன்றி முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை மற்றும் இரட்டை தலைமை குறித்து 14-ந்தேதி நடந்த கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் சில நிர்வாகிகள், கட்சியின் சட்ட விதிகளை உணராமலும், அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்தால் கட்சி தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர். கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

அத்தகைய கருத்தால் கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து கட்சி தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம்.

தள்ளி வைக்க வேண்டும்

பொதுக்குழு கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய விவரம் (அஜெண்டா) கிடைக்கப்பெறவில்லை என கட்சியின் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். கூட்டத்துக்கான பொருள் (அஜெண்டா) நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

எனவே மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு கட்சியின் நலன் கருதி, 23-ந் தேதி நடைபெறவுள்ள செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்துக்கான இடம், தேதி மற்றும் நேரத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து என்ன ஆகும்?

அ.தி.மு.க.வில் பூதாகரமாக ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? பொதுக்குழு நடைபெறுமா? நடைபெறாதா? அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

அதேவேளை அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை இதர கட்சிகளும் உன்னிப்பாக உற்று நோக்கி வருகிறார்கள். பொதுக்குழு நடைபெற இன்னும் ஓரிரு நாளே உள்ள நிலையில் பெரும் பரபரப்பை நோக்கி அ.தி.மு.க. சென்று கொண்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்